மின்சார விமானத்தை தயாரிக்க தீவிரம் காட்டும் நாசா

மின்சார விமானங்களை தயாரித்து அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் நாசா தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக மின்சார விமானத்தை தயாரித்து, அதனை சோதனை ஓட்டத்திற்காக நாசா தயார் செய்து வருகிறது.


21ஆம் நூற்றாண்டில் மின்சார பைக், மின்சார கார் என மின்சார மயத்தில் உலகம் நகர்ந்து கொண்டிருக்க, விரைவில் விமானத்தையும் மின்சாரத்தில் இயக்குவார்கள் என பலரால் பேசப்பட்டது. இதையும் சாத்தியப்படுத்த முடியும் என அறிவித்து, மின்சார விமானத்தை தயாரித்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா..


எதிர்காலத்தில் விமானங்களை மின்சாரம் மூலம் எப்படி இயக்குவது என்னும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபடப்போவதாக அறிவித்து அதில் தீவிரமாக செயல்பட்டு வரும் நாசா, தற்போது சோதனை முயற்சியாக முதல் மின்சார விமானத்தை வடிவமைத்துள்ளது. இதனை கலிபோர்னியாவில் உள்ள ஆர்ம்ஸ்ட்ராங்க் விமான ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி, நீண்ட முயற்சிகளுக்கு பிறகு இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு X-57 மேக்ஸ்வெல் அல்லது எக்ஸ் பிளேன் (X-plane) என பெயரிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த விமானம், மின்சாரம் மூலம் சுற்றுச்சூழலைப் பாதிக்காத ஒன்றாக இருக்கும் எனவும், அதிக சத்தங்களை எழுப்பாமல் இந்த விமானம் விண்ணில் பறக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. சோதனை ஓட்டத்திற்கு முன்பு இந்த விமானத்தை வெளியுலகிற்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ள நாசா, இதனால் மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவியாக இருக்கும் என கூறியுள்ளது. நான்கு இருக்கைகளை கொண்டவாறு மெல்லிய தோற்றத்தில் Tecnam என்னும் இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு இத்தாலியில் உருவாக்கப்பட்ட விமானத்தில் Rotax இயந்திரங்களுக்குப் பதிலாக 14 எலக்ட்ரிக் மோட்டார்களைப் பொருத்தியுள்ள நாசா, இதன்மூலம் ஒரு மணி நேரம் பறக்கலாம் என கூறியுள்ளது. மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த விமானம் எலக்ட்ரிக் மோட்டார்களை கொண்டு 160 கிலோ மீட்டர் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் சிக்கலான என்ஜின்கள் கொண்ட விமானங்களையும் மின்சார மயமாக்க உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.. இந்த விமானத்தில் நிறைய பேட்டரிகள் சுமந்து செல்வதன் மூலம் எடை அதிகரிப்பதோடு, எலக்ட்ரிக் மோட்டார்களின் மீதும் அதிக அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான தீர்வையும் நாசா நிறுவனம் கண்டறிந்து செயல்படுத்தினால், அது போக்குவரத்து துறையில் புதிய சகாப்தமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..