புதிய நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்த “ஒரு தனி மனிதனால்” முடியாது, ஒரு பலமான அணி தேவை
இன்று பல தொழில் முனைவோர் அந்த தொழிலை முழுமையாக தெரியாமலேயே தொடங்கிவிடுகின்றனர். பொருட்களை தரமாக தயாரிக்க தெரியும், விற்க தெரியாது. விற்பனை சூட்சமம் தெரியும், ஆனால் அவருக்கு சிறப்பாய் தயாரிக்க தெரியாது. 70% புதிய சிறு, குறு நிறுவனங்கள் இதனால் தோல்வியை சந்திக்கின்றனர். இதனைப் பார்க்கும் புதிய தொழில்முனைவோருக்கு புதிய தொழிலை தொடங்க பயப்படுகின்றனர்.
“One Man Army” ஒரு நபர் உள்ள ராணுவம் நான் என தன்னம்பிக்கையுடன் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் வெற்றி பெற முடியாது. விளையாட்டில் அணியாக சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி. ஒரு தொழிலுக்குறிய நல்ல அணியாக, பணியாளர்கள், விற்பனையாளர்கள், ஏஜென்ட்கள் என அனைவரும் அமைந்தால்தான் உடனடி வெற்றி. இல்லையேல் வெற்றி தாமதமாகும். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாதீர்கள்.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்த
அதனை அவன்கண் விடல்”
இந்த பணியை இவன் சிறப்பாய் செய்வான் என முடிவு செய்து விட்டால், நல்ல பயிற்சி கொடுத்து தொழிலை கற்றுக் கொடுத்து நிரந்தரமாக வைத்துக் கொள்ளுங்கள். பலர் நல்ல ஆட்கள் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவார்கள். முதலில் ஒற்றை ஆளை நம்பும் தொழில்கள் நலிவடைந்து விடும்.
நல்லவர்கள், கடுமையான உழைப்பாளிகள், திறமைசாலிகளை வேளைக்கு சேருங்கள் வேலைகளைப் பிரித்துக் கொடுங்கள். அவர்களது சிந்தனைகளை பயன்படுத்துங்கள், தொழிலை நன்கு அறிந்திருப்பது பணியாளர்கள் தான். அவர்கள் தொழில் பற்றி பல யோசனைகளை கூறமுடியும். விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் நேரடியாக தொடர்பு உள்ளவர்கள் எனவே பல விஷயங்களை அறிந்து யோசனை சொல்வார்கள். தொழில்முனைவோரான நீங்கள் புத்திசாலி பணியாளர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மூலம் தொழிலை வளர்க்க வேண்டும்.
சந்தையை அறிந்த பல புதிய தொழில்முனைவோர், நல்ல விற்பனையாளர்களை, நல்ல சம்பளம் கொடுத்து பணி அமர்த்துங்கள். தொழில்முனைவோர்
- தயாரிப்பு துறை
- கணக்குத்துறை
- விற்பனை பிரிவு
இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். பொருள் தரமாக இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு, சரியான ஊருக்கு பொருள் போய் சேரவேண்டும், தேவையான விளம்பரங்கள் செய்ய வேண்டும், ஒவ்வொரு கட்டத்திலும் பணியாளர்களின் பணி முக்கியமானது.
எனவே கிளீனர், டிரைவர் முதல் விற்பனை மேலாளர் வரை நம்பிக்கைக்கு உரியவர்களாக தேர்வு செய்து நிரந்தர பணி கொடுத்து வைத்துக் கொண்டால் தான் தொழிலில் வளர முடியும், விரிவுபடுத்த முடியும். நல்ல அக்கவுண்டண்ட்கள் / ஆடிட்டர்கள் மூலம் ஜிஎஸ்டி, விற்பனை வரி, வருமான வரி, கட்டட கார்ப்பரேஷன் வரி, கடன் தவணை மற்றும் சம்பளம் முதலியவற்றை சரியாக செலுத்தி கணக்கு எழுதி வைத்து தினமும் லாப நஷ்ட கணக்கு பார்பவர்களே தொழிலில் முன்னேறியுள்ளனர். நல்ல பணியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் அவர்கள் வேலையை பயன்படுத்தி முன்னேறுவதே புத்திசாலித்தனமாகும்.